விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, உத்தரபிரதேச மாநில சட்ட ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், மாநிலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து உத்தேச வரைவு மசோதாவின் சில பகுதிகளை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை கொள்கை:
இந்த வரைவு மசோதா இரண்டு குழந்தைகள் கொள்கையை மேம்படுத்த பல நடவடிக்கைகளை முன்மொழிகிறது. அதே சமயம், இது ஒற்றைக் குழந்தைகளுடன் கூடிய தம்பதிகளை ஊக்குவிக்கிறது.
ஒரு குழந்தைக் கொள்கையை ஊக்குவிப்பதை விஷ்வ ஹிந்து பரிஷத் கடுமையாக எதிர்க்கிறது. ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2 க்கும் குறைவான குழந்தைகளை இலக்காகக் கொண்ட ஒரு கொள்கையை வகுப்பது, காலப்போக்கில் பெரிய அளவில் மக்கள் தொகை சுருங்க வழிவகுக்கும். இத்தகைய சுருக்கம் பல எதிர்மறையான சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்.
சீன உதாரணம்:
இந்த கொள்கை தவறானது என்பதற்கு சீனாவே சிறந்த உதாரணம். கடந்த 1980ல் ஒரு குழந்தை கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தியது. ஆனால் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் சமுதாயத் தாக்கத்தை உணர்ந்து அதனை திரும்பப் பெற்றுள்ளது.
எதிர்மறை விளைவுகள்:
உத்தரபிரதேசத்தைப் பொறுத்தவரையில், ஒரு குழந்தைக் கொள்கை வெவ்வேறு சமூகங்களிடையே ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை தொடர்பான ஊக்கத்தொகைகள், சலுகைகள் இதில் மாறுபாட்டை ஏற்படுத்தும்.
அசாம் கேரளா:
அசாம் மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே உள்ள மக்கள்தொகை பெருக்கம், ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அபாயகரமானது. அந்த இரு மாநிலங்களிலும், ஹிந்துக்களின் மொத்த கருவுறுதல் சதவீதம் (டி.எப்.ஆர்) 2.1 ஐ விட மிகவும் குறைந்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் எண்ணிக்கை அசாமில் 3.16 ஆகவும், கேரளாவில் 2.33 ஆகவும் உள்ளது. இதன் விளைவாக, கேரளாவிலும் அசாமிலும் ஒரு சமூகம் சிறுபான்மையாக மாறும் அபாயக் கட்டத்தில் நுழைந்துள்ளது, மற்றொன்று மேலும் விரிவடைந்து கொண்டுள்ளது. எனவே, வருங்காலத்தில், அசாம், கேரளா போன்ற மாநிலங்களின் பிரச்சினைகளில் உத்தரபிரதேசம் சிக்கித் தவிப்பதை தவிர்க்க வேண்டும்.
மக்கள்தொகை கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துதல் மற்றும் இரண்டு குழந்தை விதிமுறைகளை மேம்படுத்துதல் என்ற இரட்டை நோக்கங்களுடன் இந்த மசோதா உடன்படுகிறது. ஆனால், மாநிலத்தின் குறிக்கோள்களை அடைய அது செல்ல வேண்டிய பாதையில் பயணிக்கவில்லை என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.