உத்தர பிரதேசம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனை ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய், 2 கோடி ரூபாய் நிலத்தை 18 கோடிக்கு வாங்கி ஊழல் செய்ததாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பத் ராய், நிலத்தை சந்தை விலையை விட குறைவாகவே வாங்கியதாக விளக்கம் அளித்தார். நிலத்தை விற்றவர்களும் தெளிவான விளக்கங்கள் அளித்தனர். விரைவில் நடைபெற உள்ள உத்தர பிரதேச தேர்தலை முன்னிட்டு இதில் அரசியல் செய்து லாபம் அடைய எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன என்பது கண்கூடு. இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின், ‘ஸ்ரீராமர் கோயிலுக்கு நிலம் கையகப்படுத்தியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்தும் வெளிப்படையாக, நேர்மையாக நடந்துள்ளது. எதிர்கட்சிகள், ஆதாரமில்லாததால் நீதிமன்றத்தை அணுகவில்லை. எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வழக்கு தொடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.