அதிக கட்டணம் காரணமாக குறைந்த அளவில் பயணியர் செல்லும் குறிப்பிட்ட வந்தே பாரத் ரயில்களில் கட்டணங்களை மறு ஆய்வு செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிவேக வந்தே பாரத் ரயில், கடந்த 2019ல் புதுடில்லி – வாரணாசி இடையே முதன்முதலாக இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு போதிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து சென்னை, மும்பை, திருவனந்தபுரம், செகந்திராபாத் உட்பட பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 23 வழித்தடங்களில், 46 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும், சில வழித்தடங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சமீபத்திய ஆய்வில் வந்தே பாரத் ரயில்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ‘கட்டணத்தை குறைத்தால், கூடுதல் பயணியர் வந்தே பாரத் ரயில்களை விரும்புவர் என நம்பப்படுகிறது. ஆகையால், குறுகிய துாரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தை மறு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.