சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் உள்ள குண்டாங்கண்மாயில் பழங்காலத்து கல்வெட்டு ஒன்று இருப்பதாக கவியோகி சுத்தானந்த பாரதி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில் சிவகங்கை தொல்லியல் குழுவினர் அந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். நான்கரை அடி உயரமுள்ள இந்த கல்வெட்டில் 30 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட வரிகள் சிதைந்து உள்ளது. இது 16, 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலக் கல்வெட்டு. இது, ‘ஸ்வஸ்தி ஸ்ரீ’ எனும் சொல்லோடு தொடங்குகிறது. காத்தம நாயக்கர் என்ற பெயர் உள்ளது. இவர் அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம். மதுனா ஆலங்குளம், குண்டேந்தல், குத்திக்குளம், பெருமாளக்குளம், கோரத்தி கண்மாய் போன்ற நீர்நிலைகள் குறிப்பிடப் பெற்றுள்ளன. இந்த கல்வெட்டில் இறுதியாக “இதற்குக் கேடு விளைவிப்பவர் கங்கைக் கரையிலே காரம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போவர்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் “இந்த கல்வெட்டில் விஷ்ணுவின் வாமன அவதாரம் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.