வேல் சிலை உடைப்பு

உலக புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழனியில், பஸ் நிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் கிரானைட் கல்லால்செய்யப்பட்ட வேல் சிலை உள்ளது. பழனியின் அடையாளமாக விளங்கும் இந்த சிலைக்கு தினமும் பக்தர்கள் மாலை அணிவிப்பர். இந்நிலையில் மர்மநபர் ஒருவர் வேல் சிலையை தாக்கி உடைத்தார். இதைக் கண்ட பொதுமக்கள் ஓடி வந்து சிலையை உடைத்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து அங்குவந்த காவல்துறையினர் அந்த நபரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதற்கிடையே வேல் சிலை உடைக்கப்பட்ட தகவலை அறிந்த இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் ஏராளமானோர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், உடைக்கப்பட்ட சிலையை சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிலையை உடைத்த நபர் மனநலம் பாதித்தவரா, போதை நபரா அல்லது சமூக விரோதியா வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.