வைக்கத்து மகாதேவ அஷ்டமி

பத்மாசுரனும், அவனது சகோதரன் தாரகாசுரனும், தேவர்களுக்கு அளவிடமுடியாத கொடுமைகள் செய்தனர்.அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, கந்தனை உருவாக்கினார்.முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி அவர்களுக்கு அடைக்கலமும் அளித்தார்.

நியாயத்துக்காகச் செய்த கொலையானாலும், பாவம் வந்துசேரும்.அந்தப் பாவத்திற்கு பரிகாரம்தான் அன்னதானம்.சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார்.அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர்.இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோயில் வரலாறு கூறுகிறது.

கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.இதை, ‘வைக்கத்தஷ்டமி’ என்பர்.இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர்.இந்த தானத்தை ஏற்க, சிவனே வருவதாக ஐதீகம்.அதுபோல், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற பரவச நிலையை அடைகின்றனர்.மேலும், சிவன் பைரவராக உருவெடுத்து அந்தகாசுரன் என்ற அரக்கனை அழித்ததால், இங்கு, பைரவர் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை வரும் வைக்கத்து மகாதேவ அஷ்டமி நாளில் நாடெங்குமுள்ள பல சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பிராத்தனைகள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று வைக்கம் (கேரளம்), திருப்பரங்குன்றம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல சிவன் கோயில் சன்னதிகளில்  வைக்கத்து மகாதேவ அஷ்டமி விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி சொக்கநாதருக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் அன்னதானமும் நடைபெறும்.பக்தர்கள் சாப்பிட்ட இலையில், சில பக்தர்கள் சிலர் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் உருண்டு நேர்த்திக்கடனும் செலுத்துவர்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி