தடுப்பூசி திருவிழா நீட்டிப்பு

புதுச்சேரியில் கடந்த 16ம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், திருமண மண்டபங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்களும் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர். மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, கொரோனா தடுப்பூசி திருவிழாவை மேலும் 2 நாட்கள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி திருவிழாவில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டவர்களில், தினமும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 25 அதிர்ஷ்டசாலிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கவும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்ட முதல் 10 கிராமங்களுக்கு விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பாகப் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கும் ரொக்கப்பரிசுடன் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.