தென் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் முக்கிய இடம்பிடித்துள்ள வ உ சிதம்பரனார் துறைமுகம், தனக்குள்ள வசதி வாய்ப்புகளான ரயில், சாலை இணைப்பு, முக்கிய கடல் வழி அருகாமை, அனைத்து பருவநிலைகளிலும் செயல்படக் கூடிய தன்மை, கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு இணைப்பாக விளங்கக் கூடிய புவியியல் ரீதியிலான அமைப்பு ஆகியவற்றின் காரணமாக பன்னோக்கு போக்குவரத்து பூங்கா திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. தென்தமிழகத்தில் மிகப்பெரும் உற்பத்தி மையங்களாக திகழும் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் இத்துறைமுகம் இந்த முயற்சிக்கு இயற்கையிலேயே பொருத்தமான துறைமுகமாகவே அமைந்துள்ளது. சரக்குகளை தடையின்றி கையாள பன்னோக்கு போக்குவரத்து கட்டமைப்பு, குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு, இயந்திர வசதியுடன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட கிடங்குகள், கண்டெய்னர்களை இடமாற்றம் செய்யக் கூடிய முனையங்கள், பெருமளவிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்ட பெரிய கிடங்குகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாக இந்த பன்னோக்கு போக்குவரத்து பூங்கா அமையும்.