ஆங்கிலேய அரசு கொண்டு வந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடந்தது. 20,000 பேர் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் இயந்திர துப்பாக்கிகளை கொண்டு வந்த காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயரின் படை, எவ்வித எச்சரிக்கையும் இன்றி அப்பாவி மக்களை நோக்கி 1,650 ரவுண்டுகள் சுடப்பட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பலர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். “சுட்டேன் சுட்டேன்… துப்பாக்கி குண்டுகள் தீரும்வரை சுட்டேன்’’ என டயர் கொக்கரித்தான். டயர் செய்ததைச் சரி என்று ஆதரித்தார் மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட். இங்கிலாந்து நாடாளுமன்றம் அச்செயலை ஆதரித்துத் தீர்மானம் போட்டது.
இந்தப் படுகொலையை அறிந்த உத்தம் சிங் இரு ஆங்கிலேய அதிகாரிகளையும் கொல்ல உறுதி பூண்டார். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டார்.
ஒரு நிகழ்ச்சிக்காக காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் மற்றும் ஜெட்லாண்ட் எனும் அமைச்சர் வந்ததும் குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர். வந்த வேலை முடிந்ததும் ஓடாமல் கம்பீரமாக அங்கேயே நின்ற உத்தம் சிங் ,”என்னுடைய வேலை முடிந்தது, என் நெஞ்சின் கனல் தணிந்தது” என்று அறிவித்தார். நீதிமன்றத்தில், “டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன்” என்று உறுதிபடச் சொன்னார்.
‘‘சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் அவன் உயிர் பிரியும்வரை சுட்டேன்!”என்று சொல்லி கம்பீரமாகத் தூக்கு மேடை ஏறினார் அந்த வீரன். எங்கள் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேய மண்ணில் 6 அடி நிலத்தை ஒரு இந்தியன் நிரந்தரமாக ஆக்கிரமித்தான் என்பதை உங்களுக்கு நினைவூட்ட என்னுடைய பிணம் ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்பட வேண்டும் எனும் அளவுக்குத் தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம். டைம்ஸ் பத்திரிக்கை அவருக்கு புகழாரம் சூட்டியது. ‘யானை போலப் பழி வாங்காமல் ஓயமாட்டார்கள் இந்தியர்கள்’ என்று ஜெர்மனி வானொலி அறிவித்தது.
மாவீரன் உத்தம் சிங்கின் நினைவு தினம் இன்று.