அமெரிக்காவிடம் இருந்து, 31 எம்.க்யு – 9.பி., போர் வகை ட்ரோன்களை பெறுவதற்கான ஒப்பந்தத்தை ராணுவ அமைச்சகம் சமீபத்தில் இறுதி செய்திருந்தது. இந்நிலையில், அவற்றை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியா – அமெரிக்கா நட்புறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கு இடையில் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம், பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது இறுதி செய்யப்பட்டது. இதன்படி, எம்.க்யு – 9 பி., போர் வகை ட்ரோன்களுக்கான பாகங்களை இணைத்து இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இத்துடன், இதன் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைப்பது ஆகியவையும் உள்நாட்டிலேயே செய்யப்படும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து பெறப்படும் 31 ட்ரோன்களில், 15 ட்ரோன்கள் கடற்படைக்கும், எட்டு ட்ரோன்கள் விமானப்படைக்கும், எட்டு டுரோன்கள் ராணுவத்திற்கும் தரப்படுகின்றன.இந்த ட்ரோன்களின் மிக முக்கிய உபகரணமான, ‘டி.பி.இ., 331 – 5’ என்ற இன்ஜினை, நம் பொது துறை நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்’ தயாரிக்கிறது. இதற்கான பராமரிப்பு, பழுதுபார்த்தல், மற்றும் மாற்றியமைத்தல் ஆகியவற்றையும் இந்நிறுவனமே கூடுதலாக செய்கிறது. இந்த ட்ரோன்களுக்கான உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்க, ‘ஜெனரல் அடாமிக்ஸ்’ நிறுவனத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.