நகர்ப்புறத் திட்டமிடல் கருத்தரங்கு

நகர்ப்புறத் திட்டமிடல் மேம்பாடு மற்றும் தூய்மைக் குறித்து பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நடத்தும் இந்தக் கருத்தரங்கை சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இணைந்து நடத்தியது. மத்திய பட்ஜெட் 2023ல் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை திறமையாக செயல்படுத்தத் தகுந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெறுவதற்காக மத்திய அரசு இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்துகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகம், ஜல்சக்தி துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்துவது குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதங்கள் நடைபெற்றன. நகர்ப்புறத் திட்டமிடல் வல்லுநர்கள், நிதி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தொழில்துறையினர், தொழிலாளர் சங்கங்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். நகர்ப்புறங்களில் தூய்மைப் பணிகளில், கழிவுநீர்க் கால்வாய்ப் பணிகளில்எந்திரங்களைப் பயன்படுத்துதல், ஈரம் மற்றும் உலர்க்கழிவு மேலாண்மை, கோபர்தன் திட்டத்தின் கீழ் கழிவுகளை வளமாக மாற்றும் தொழிற்சாலைகள், பிரதமரின் பிரணம் திட்டத்தின் கீழ் ஈரப்பதக் கழிவு மேலாண்மை நகர்ப்புறத் திட்டமிடலில் சீர்திருத்தங்கள், 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மோடி, “பாரதத்தில் நகரமயமாகி வருவது வேகமாக நிகழ்ந்து வரும் நிலையில், எதிர்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமானது. நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களே தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். திட்டமிடல் சிறப்பானதாக இருக்கும்போது நமது நகரங்கள் காலநிலையைத் தாங்கும் வகையிலும், நீர்ப் பாதுகாப்பு மிக்கதாகவும் மாறும். நகர்ப்புற திட்டமிடல் வளர்ச்சி என்பது மூன்றும் முக்கிய தளங்களைக் கொண்டது. மாநிலங்களில் நகர்ப்புற திட்டமிடுதல் சூழலை எவ்வாறு வலுப்படுத்துவது, தனியார் துறைகளில் இருக்கும் நிபுணத்துவத்தை எவ்வாறு நகர்ப்புற திட்டமிடலுக்கு பயன்படுத்துவது, நகர்ப்புற திட்டமிடலை புதிய நிலைக்கு கொண்டுச் செல்ல இந்த மையங்களின் திறமைகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது ஆகியவை இதில் முக்கியம்” என கூறினார்.