தேனியில் மத்திய அமைச்சர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய எஃகு மற்றும் ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் ஃபகன்சிங் குலாஸ்தே, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், முத்ரா கடன் திட்டம், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். கிராமப்புறங்கள் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி திட்டங்கள் குறித்தும், தொழில் மேம்பாட்டிற்கு தேவையான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் தவறாமல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஊரக பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி திறன் அதிகரிப்பதால் வாழ்வாதாரம் மேம்படும். அவர்களுக்கு சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களை நாம் உருவாக்கித்தர வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறைவான எண்ணிக்கையில் உள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகள் குறைவாக உள்ளனர். இவற்றை அதிகரிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஏழைகளை பயனார்களாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் அதிகளவில் பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏக்கள் இல்லை. அதனால் மாநில அரசு மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு சென்றடையாமல் முட்டுக்கட்டை போடப்படுகிறது. நான் அடுத்த முறை இங்கு வரும்போது திட்டங்கள் முழுமையாக மக்களின் கொண்டு சேர்த்திருக்க வேண்டும்” என்றார்.