”தமிழகத்தில் அறிவிக்கப் படாத எமர்ஜென்சி நிலவுகிறது,” என, மத்திய மத்திய கால்நடை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். கோவை மாவட்டம், அன்னுாரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. ஜூன் 25ம் தேதி என்பது கருப்பு தினம். காங்கிரஸ் அரசால் நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட நாள். காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான, தி.மு.க.,வும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கிறது; குழி தோண்டி புதைக்கிறது. பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவாளர்களின் மீதான பழைய வலைதள பதிவுகளின் மீது பொய் புகார்களை எடுத்து வழக்குபதிவு செய்து சிறைக்கு அனுப்புகின்றனர்; இது கண்டனத்துக்குரியது. இந்த பூச்சாண்டி வேலைக்கு எல்லாம் பா.ஜ., தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள். கோவிலுக்கு செல்வோர் அந்தக் கோவிலின் ஆகம விதிப்படி அதை பின்பற்றி செயல்பட வேண்டும்.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் முருகன், மேட்டுப்பாளையம் வந்தார். பவானி ஆற்றின் கரையோரம் உள்ள சுப்ரமணியர் கோவிலில், சுவாமியை வழிபட்ட பின், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2024ல் நடைபெறும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., 400க்கும் மேற்பட்ட இடங்களில், வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி, மீண்டும் பிரதமராவார். செந்தில் பாலாஜி, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, முதல்வர் ஸ்டாலின், அவரை தார்மீக அடிப்படையில், அமைச்சர் பதவியிலிருந்து இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.