ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைவராக உள்ள பாரதத்தின் தலைமையில் ஆப்கானிஸ்தன் நிலவரம் குறித்த அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், பேசிய பாரதத்தின் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி ‘ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக, அதன் மக்களின் நண்பராக, தற்போது அங்கு நிலவும் நிலை பாரதத்திற்கு மிகுந்த கவலையளிக்கிறது. ஆப்கனில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தொடர்ந்து பயத்தில் வாழ்கின்றனர். எதிர்காலம் நிச்சயமற்றதாக அவர்கள் உணர்கின்றனர். கௌரவத்துடன் வாழ முடியுமா என கவலை கொண்டுள்ளனர். அடிப்படை உரிமைகள் மீறல்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன. நிலைமை விரைவில் சீராகும் என்று நம்புகிறோம். ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய பகிர்வு நல்லது. ஆப்கனில் பெண்களின் குரல்கள், குழந்தைகளின் அபிலாஷைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் போதுமான ரத்தக் களரியைக் கண்டுள்ளது. அது தொடரக்கூடாது. ஆப்கன் மக்களுக்காக சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து மற்ற எந்த நாடுகளுக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் இருக்காது என்பதையும் அனைத்து வித பயங்கரவாதங்களும் தடுக்கப்படும் என்பதையும் தலிபான்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என தெரிவித்தார்.