ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவில் சமீபத்தில் நடந்த “கோழைத்தனமான தாக்குதல் குறித்து ஐ.நா பொதுச் சபையில் பேசிய பாரதத்தின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் டி.எஸ் திருமூர்த்தி, “ஐ.நா. உறுப்பு நாடுகள் ஆபிரகாமியல்லாத மதங்களுக்கு எதிரான வெறுப்பைக் கண்டிக்கும் நேரம் இது. மதவெறியை எதிர்த்துப் போராடுவதில் மதங்களை தேர்ந்தெடுப்பதை நிறுத்த வேண்டும். நீங்கள் உண்மையிலேயே மதவெறியை எதிர்த்துப் போராட விரும்பினால், மதவெறி மீது இரட்டைத் தரநிலைகள் இருக்கக்கூடாது. பௌத்தம், ஹிந்து மதம், சீக்கியம் உள்ளிட்ட ஆபிரகாமியம் அல்லாத மதங்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் பாகுபாடுகளின் அதிகரிப்பை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, மதவெறியை எதிர்த்துப் போராடுவது ஒருபோதும் வெற்றிபெறாது. வெறுப்பு பேச்சு என்பது அமைதி, சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்திற்கு எதிரானது. துரதிர்ஷ்டவசமாக, வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றாக வாழ்வதற்கான சூழலை வழங்குகிறது என்று பாரதம் நம்புகிறது. பாரதம் இணையற்ற பன்முகத்தன்மை கொண்ட தேசம். பல நூற்றாண்டுகளாக, யூத சமூகம், திபெத்திய பௌத்தர்கள், அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்கள் என அனைவருக்கும் அடைக்கலம் அளித்துள்ளது. பயங்கரவாதம் என்பது அனைத்து மதங்களுக்கும் எதிரானது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாரதம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்வது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் பொறுப்பு ஐ.நா.வுக்கு உள்ளது’ என பேசினார்.