ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்ட உக்ரைன்

ரஷ்யாவுடனான போரில் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள உக்ரைன், பாரதத்திடம் மனிதாபிமான உதவிகளை வேண்டி கையேந்தி நிற்கிறது. ஆனால் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ஹிந்துக்களை சீண்டும் விதமாக கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது. அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் ஹிந்துக்கள் கடவுளாக வணங்கும் காளி தேவியின் உருவம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் சித்தரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதனை ‘கலைப்படைப்பு’  என்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைனின் இந்த ஹிந்துபோபிக் கார்ட்டூனுக்கு உலக நாடுகளில் பரவலாக வசிக்கும் பாரத சமூகத்தினர், பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து சத்தமில்லாமல் தனது பதிவை நீக்கியது உக்ரைன். இதனிடையே, உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் எமின் டிஜெப்பர், உக்ரைன் வெளியிட்ட ஹிந்துபோபிக் கார்ட்டூனுக்காக மன்னிப்புக் கோரினார். அவரது பதிவில், “ஹிந்து தெய்வமான #காளியை சிதைக்கும் வகையில் எங்களது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சித்தரித்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். உக்ரைன் மற்றும் அதன் மக்கள் தனித்துவமான பாரத கலாச்சாரத்தை மதிக்கிறார்கள், மிகவும் பாராட்டுகிறார்கள், ஆதரிக்கின்றனர். சித்தரிப்பு ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் நட்பின் உணர்வில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று டுவீட் செய்துள்ளார்.