மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேயும், அவரின் குடும்பத்தினரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், அது குறித்து மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்கவேண்டும் என்றும் கோரி பொதுநலன் வழக்கு ஒன்றை கெளரி பிடே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவரது மனுவில், “உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கு அதிகாரப்பூர்வமாக எந்த வருமானமும் கிடையாது.ஆனால் மும்பை, ராய்கட்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.தாக்கரே குடும்பத்திற்கு நெருக்கமான சிலரிடம் அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ அமைப்புகள் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், சொத்துக்களை கண்டுபிடித்துள்ளன.அவர்கள் இன்னும் விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பில் தான் உள்ளனர்.அவர்களிடம் பிடிபட்டவை உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கு சொந்தமானது.கொரோனா காலத்தில் பிரிண்டிங் மீடியா கடுமையான நஷ்டத்தை சந்தித்தது.ஆனால், அந்த நேரத்தில் (2019, 2020 வருடங்களில்) தாக்கரே குடும்பத்திற்கு சொந்தமான பிரபோதன் பிரகாஷன் நிறுவனத்தில் 42 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடத்தியது.ரூ.11.5 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.இதன் மூலம் கருப்புப் பணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.ஆனால், 2018ம் ஆண்டு வரை பிரபோதன் பிரகாஷனில் எவ்வித வர்த்தகமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனவே உண்மையை வெளிக்கொண்டு வர பாரபட்சமற்ற மத்திய விசாரணை அமைப்புகள் இதனை விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது தாக்கரே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எந்தவித ஆதாரமும் இல்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறினர்.அரசு வழக்கறிஞர், தாக்கரே குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து வருகிறது என்றார்.இதையடுத்து இந்த பொதுநலன் மனு மீதான விசாரணையை நீதிபதிகள் முடித்துவைத்தனர். ஏற்கனவே சிவசேனாவை இரண்டாக உடைத்துவிட்ட நிலையில் தற்போது உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது தாக்கரே குடும்பத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.