‘மாநில பல்கலைக்கான துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் எங்களுடைய பிரதிநிதிகள் இல்லாவிட்டால், அது செல்லாது; சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்’ என, தமிழக அரசுக்கு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு எச்சரித்துள்ளது. சென்னை பல்கலை, கோவை பாரதியார் பல்கலை மற்றும் கல்வியியல் பல்கலை ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக தேடுதல் குழுவை அமைத்து, கவர்னர் ரவியின் பார்வைக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பியிருந்தது. இந்தக் குழுவில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதியை சேர்த்து, கவர்னர் ரவி, கடந்த செப்., 6ல் உத்தரவிட்டார்.
ஆனால், யு.ஜி.சி., பிரதிநிதியின் பெயரை நீக்கி, தமிழக அரசு, செப்., 13ல் அரசாணையை வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, யு.ஜி.சி., சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
மாநிலப் பல்கலைக்கழகங்களில், துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. துணை வேந்தர் தேடுதல் குழுவில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதி இருப்பது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு மாறாக செயல்பட்டால், அந்த நியமனம் செல்லாது. மேலும், சட்டக் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.