அமெரிக்க பொருளாதார கணிப்புகள்

அமெரிக்காவின் பெடரல் வங்கி சமீபத்தில் திடீரென 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்திய நடவடிக்கை, அமெரிக்க வர்த்தக சந்தையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளதாக பெடரல் வங்கியும் அமெரிக்க அரசும் தெரிவித்தன. இந்த தொடர் வட்டி விகித உயர்வு அமெரிக்க பொருளாதாரம் ஊசலாடிக் கொண்டிருப்பதை காட்டுகிறது, இந்த நடவடிக்கை அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும், இந்த மந்தநிலை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இன்றுவரை அமெரிக்கா உலகின் முதன்மையான நாடாக பார்க்கப்படுவதால் அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் உலகின் பிற நாடுகளையும் பாதிக்கும் சாத்தியக்கூறுகளை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரம் பொருளாதார மந்த நிலை குறித்த சிலரின் கருத்துகள்:

லாரி சம்மர்ஸ் (அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர். பாரதத்தில் நிதியமைச்சர் என்ற பதவிக்கு இணையான பதவி): ‘அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையைக் காணும்’ என தெரிவித்துள்ளார்.

அடேனா ஃப்ரீட்மேன் (உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்றான நாஸ்டாக் தலைமை நிர்வாக அதிகாரி): ‘இந்த பொருளாதார மந்தநிலை பற்றிய கணிப்புகள் அமெரிக்காவின் முதல் இடத்திற்கு தரும் எச்சரிக்கையாக இருக்கலாம். இத்தகைய கணிப்புகள் நுகர்வோர் நம்பிக்கையை சிதைத்துவிடும். சந்தைகளும் நிலையற்றதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

லாயிட் பிளாங்க்ஃபைன் (நிதிச் சேவைகள் நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸின் மூத்த தலைவர்): ‘அமெரிக்காவின் மந்தநிலை மிக மிக அதிக ஆபத்து. ஆனால் அதைத் தடுக்க மத்திய வங்கி சக்திவாய்ந்த கருவிகளையும் கொண்டுள்ளது’ என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

டேவிட் சாலமன் (கோல்ட்மேன் சாக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி): ‘அடுத்த 12 முதல் 24 மாதங்களில் மந்தநிலை ஏற்பட 30 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்த மந்தநிலை மிக மிக மெதுவான மந்தமான வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார்.

எலான் மஸ்க் (உலகின் மிகப் பெரிய பணக்காரரும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி): ‘நீண்ட காலமாகவே அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. மூலதனத்தை மேலும் தவறாக ஒதுக்கீடு செய்வது வரும் மாதங்களில் பொருளாதார நிலையை மோசமாக்கும்’ என்று எச்சரித்துள்ளார்.

பில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட் இணை நிறுவனர்): ‘உக்ரைன் ரஷ்யா போர் போன்ற காரணங்களால் பணக்கார நாடுகள் பணவீக்கப் பிரச்சினைகளை துரிதப்படுத்தலாம். இது வட்டி விகிதங்களை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இது இறுதியில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும். இதனால் பங்குச்சந்தையில் கரடிகளின் ஆதிக்கத்தை அதிகரிக்க செய்யும்’ என்று அச்சம் தெரிவித்துள்ளார்.