பாரதத்தில் முடக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சார்பு டுவிட்டர் கணக்குகளில் கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜக்மீத் சிங், ரூபி கவுர் உள்ளிட்டோரின் கணக்குகளும் இடம் பெற்றுள்ளது. ஜக்மீத் சிங், பாரதத்துக்கு எதிரான கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று பாரதத்தில் பல காலிஸ்தான் சார்பு டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மத்திய ஏஜென்சிகள் அல்லது பஞ்சாப் காவல்துறையின் கோரிக்கையின் பேரில் கணக்கு நிறுத்தப்பட்டதா என்பது சரியாகத் தெரியவில்லை. கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) தலைவர் ஜக்மீத் சிங், கனேடிய கவிஞர் ரூபி கவுர், தன்னார்வ தொண்டு நிறுவனமான யுனைடெட் சீக்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆர்வலர் குர்தீப் சிங் சஹோடா மற்றும் பலரது டுவிட்டர் கணக்குகளும் இதில் முடக்கப்பட்டன. மேலும், சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவரும்மக்களவை எம்.பியுமான சிம்ரன்ஜித் சிங் மானின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் 18 அன்று, பஞ்சாபில் காலிஸ்தான் சார்பு தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக பஞ்சாப் காவல்துறை கடும் நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியது. ஜி20 உச்சிமாநாட்டிற்காக மாநிலத்தில் சி.ஆர்.பி.எப் உட்பட மத்திய அமைப்புகளின் பாதுகாப்பு வீரர்கள் பஞ்சாப் காவல்துறையுடன் இணைந்து இதில் செயல்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். எனினும், அம்ரித்பால் சிங்இன்னும் தலைமறைவாக உள்ளதால், அவரைப் பிடிக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள பாரத தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பாரதத் தூதரகமும் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. பாரத அரசு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசுகளிடம் இந்த விவகாரத்தை எழுப்பி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.