விளையாட்டு காட்டும் டுவிட்டர்

மத்திய அரசின் புதிய விதிமுறையின்படி, பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, பாரதத்தை சேர்ந்த ஒருவரை குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்காமல், ‘டுவிட்டர்’ காலம் தாழ்த்தி வந்தது. அரசு எச்சரித்த பின், வேண்டுமென்றே ஜெரமி கெசல் என்ற அமெரிக்கரை அந்நிறுவனம் நியமித்தது. இந்நிலையில், மத்திய அரசின் விதிமுறைகளை டுவிட்டர் நிறுவனம் மீறியதாக, அமித் ஆச்சார்யா என்பவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், புதிய குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க, இஷ்டத்துக்கு கால அவகாசம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது, புதிய அதிகாரி நியமனம் எப்போது என்பது குறித்து இன்றைய தினம் நீதிமன்றத்தில் தெளிவான பதிலை அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

உ.பியில் டுவிட்டரின் வில்லங்கம்:

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் அப்துல் சமத் என்ற முதியவரை, போலி தாயத்து பிரச்சனை காரணமாக சில முஸ்லிம்கள் தாக்கினர். ஆனால், கலவரம் ஏற்படுத்தும் நோக்கில், அவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதரம்’ என, கோஷமிட வற்புறுத்துவதாக அது திரிக்கப்பட்டு சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த, வீடியோவை நீக்க டுவிட்டரை, உ.பி காவல்துறையினர் அறிவுறுத்தினர். டுவிட்டர் அதனை  நீக்க மறுத்தது. பின்னர் நடவடிக்கைக்கு பயந்து நீக்கியது. இது குறித்து, டுவிட்டர் மீது உ.பி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

கைது செய்யக்கூடாது:

டுவிட்டர் இந்தியா தலைவர் மணிஷ் மகேஸ்வரி நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மணிஷ் மகேஸ்வரி தரப்பு, ‘என்னை கைது செய்ய மாட்டோம் என, உ.பி காவல்துறையினர் உறுதி அளித்தால், 24 மணி நேரத்திற்குள், உ.பியில் விசாரணைக்கு ஆஜராக தயார்’ என தெரிவிக்கப்பட்டது. அவரை கைது செய்வதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. என உ.பி காவல்துறை பதில் அளித்துள்ளது.

மத்திய அரசு மனு:

டுவிட்டர், வாட்ஸப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓ.டி.டி இணைய ஒளிபரப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த புதிய விதிகளை எதிர்த்து நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.