டுவிட்டர் தலையில் கொட்டு

‘மக்கள் நலனில் டுவிட்டர் மிகவும் அக்கறை வைத்துள்ளது. எங்களது சேவை தொடர்ந்து கிடைக்க பாரத அரசின் சட்டத்திற்கு உட்பட்டு முயற்சிப்போம்’ என கூறிக்கொண்டே தொடர்ந்து பாரத அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது டுவிட்டர் நிறுவனம். ‘பாரதத்தின் சில பகுதிகளை சீனாவின் பகுதிகளாகக் காட்டியது, கொரோனாவின் உருமாற்றம் அடைந்த புதிய பி .1.617 வகையை ‘இந்திய வகை’ என குறிப்பிடும் சொற்களை நீக்க அரசு கூறியும் இன்றுவரை நீக்கவில்லை. அமெரிக்காவின் கேப்பிடல் ஹில்லில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, உடனடியாக அவர்கள் பதிவுகளை நிறுத்திய டுவிட்டர், டெல்லியில் செங்கோட்டையில் விவசாய போராட்டம் என்ற பெயரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த பதிவுகளை நீக்கவில்லை. கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பரப்பப்பட்ட பல பொய்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும், எவ்வித காரணமும் கூறாமல் கணக்குகளை முடக்குவது, பதிவுகளை நீக்குவது’ என பல்வேறு சம்பவங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்நிலையில், ‘நீங்கள், லாப நோக்குடன் செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், பாரதத்தின் சட்டக் கொள்கையில் நுழைந்து ஆணையிட முயற்சிக்காதீர்கள்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்கு விதிகளை நிர்ணயிக்கவும், சட்ட நடைமுறைகளை பலவீனமாக்கவும் டுவிட்டர் முயற்சிக்கக்கூடாது. டுவிட்டர் தன் கொள்கைகளில் உறுதியுடன் இருந்தால், அது ஏன் பாரதத்தில் சொந்தமாக ஒரு முறையான, வெளிப்படையான கட்டமைப்பை இதுவரை உருவாக்க முயற்சிக்கவில்லை, பாரதத்தில் இருந்து அதிக வருவாய் ஈட்டினாலும், டுவிட்டர் பாரதத்தை அடிப்படையாகக் கொண்ட குறை தீர்க்கும் முறையை ஏன் நியமிக்க விரும்பவில்லை?’ என தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கேட்டுள்ளது.