துாத்துக்குடி வாகைக்குளம் டோல்கேட்டில் கட்டண குறைப்பை நிறைவேற்ற உத்தரவு

முறப்பநாடு தாமிரபரணி பாலத்தை சீரமைக்கும் வரை துாத்துக்குடி வாகைக்குளம் டோல்கேட்டில் 50 சதவீதம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை நீக்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அதை நிறைவேற்றி என்.எச்.ஏ.ஐ.,அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

திருநெல்வேலி பெர்டின் ராயன் தாக்கல் செய்த பொதுநல மனு: துாத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழிச்சாலை முறப்பநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இவ்வழியாக துாத்துக்குடி துறைமுகத்திற்கு கனரக வாகனங்களில் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. வாகைக்குளம் அருகே விமான நிலையம் உள்ளது. வாகைக்குளத்தில் டோல்கேட் செயல்படுகிறது. அதன் நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ.,) சாலையை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது. முறப்பநாடு பாலத்தில் விரிசல் மற்றும் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன. விபத்து அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் மற்றொரு பகுதியான ஒருவழிப்பாதையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாலத்தை சீரமைக்க மக்கள் பலமுறை போராட்டம் நடத்தினர். என்.எச்.ஏ.ஐ.,க்கு புகார் அனுப்பினோம். சீரமைக்கவில்லை. பாலத்தை சீரமைக்கும்வரை வாகைக்குளம் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். செப்.,11 ல் நீதிபதிகள் அமர்வு, ‘பாலத்தை சீரமைக்கும்வரை டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். முழுமையாக சீரமைக்கத் தவறும்பட்சத்தில் டோல்கேட்டில் ஒட்டுமொத்தமாக கட்டணம் வசூலிக்க தடை விதிக்க நேரிடும், என உத்தரவிட்டது.

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு நேற்று விசாரித்தது. பாலத்தின் ஒரு பகுதியில் சீரமைப்பு பணியின் பெரும்பகுதி முடிந்துள்ளது. 15 நாட்களில் முழுமையடையும். மற்றொரு பகுதியில் 3 மாதங்களில் நிறைவடையும். கட்டண குறைப்பு உத்தரவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இடைக்கால உத்தரவை நீக்க வேண்டும்.

 

 

மனுதாரர் தரப்பு

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் தற்போதுவரை 100 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சீரமைப்பு பணியை 90 நாட்களில் முடித்துவிடுவோம் என என்.எச்.ஏ.ஐ., தரப்பு 2021 நவம்பரில் இந்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தும் முன்னேற்றம் இல்லை. பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாக உள்ளது. . இடைக்கால உத்தரவை நீக்க மறுத்த நீதிபதிகள், டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை நிறைவேற்ற வேண்டும். என்.எச்.ஏ.ஐ.,தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு செப்.,29 க்கு ஒத்திவைத்தனர்.