அமெரிக்க பகுப்பாய்வு மற்றும் தரவு நிறுவனமான ‘காம்ஸ்கோர்’, டிஜிட்டல் செய்தித் தளங்கள் குறித்த புள்ளிவிவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதில், நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சில முக்கிய அமெரிக்க செய்தி நிறுவனங்களின் வாசகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. டைம்ஸ், தி அட்லாண்டிக், ஏபிசி நியூஸ் உள்ளிட்ட சில பத்திரிகைகளின் வாசகர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை அதன் வாசகர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இழந்துள்ளது. விதிவிலக்காக ‘பஃப் ஃபீட்’ என்ற செய்தி நிறுவனம் மட்டும் 7 சதவீத வாசகர்களை அதிகமாகப் பெற்றுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் பரபரப்பான பேச்சு, அதிரடி நடவடிக்கைகள், சில சமயங்களில் வில்லங்கமான பேச்சு உள்ளிட்டவை இந்த பத்திரிகைகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பரபரப்பான செய்திகளை கொடுத்ததால் அவை நன்றாக விற்பனையாகின. அது போன்ற நடவடிக்கைகள் தற்போது இல்லாததால் அவை தங்கள் வாசகர்களை இழந்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால், டிரம்ப் தன் செயல்பாடுகளால், மறைமுகமாக இந்த பத்திரிகைகளை வாழவைத்தார் என்றே சொல்லலாம் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.