தி.மு.கவின் உண்மை முகம்

திமுக எம்.பியான ஆர்.எஸ்.பாரதி, ‘தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என பட்டியியலின மக்களை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார். ‘ஆதிதிராவிட மக்கள் கட்சி’ கொடுத்த புகாரையடுத்து, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு போடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்குக்கான முகாந்திரம் உள்ளதாக கூறி, ஆர்.எஸ் பாரதியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

சில நாட்களுக்கு முன், ஈரோடு, டி.என் பாளையத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரத்தில் அருந்ததியர் சமுதாய தி.மு.க எம்.பி.அந்தியூர் செல்வராஜை மேடைக்கு கீழே அமர வைத்து இழிவுபடுத்தியவர் ஸ்டாலின்.

தி.மு.கவின் தயாநிதிமாறன், ‘ஒன்றிணைவோம் வா’ பிரச்சாரத்தில் பெறப்பட்ட மனுக்களை தலைமை செயலாளரிடம் ஒப்படைத்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ‘நாங்கள் தலைமை செயலாளரால் மூன்றாம் தரப்பு மக்களை போல இன்று நடத்தப்பட்டோம். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?’ என்று கேள்வியெழுப்பினார்.

தருமபுரியில் கனிமொழியின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஒரு பெண், ‘தான் ஒரு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தங்களை தி.மு.கவினரே கட்சிக்குள் புறக்கணிக்கிறார்கள்’ என கூறினார்.

கடந்த அக்டோபரில் கடலூர், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம், திட்டையின் ஊராட்சிமன்றத் தலைவர், தி.மு.கவை சேர்ந்த பட்டியலினப் பெண்ணான ராஜேஸ்வரி. இவரை துணைத் தலைவரான மோகன்ராஜ் தரையில் அமர வைத்தார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளியானது.

இது போன்ற பல நிகழ்வுகள், தி.மு.க சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான கட்சி என்று கூறிக்கொண்டாலும் அக்கட்சியின் தலைவர்களின் செயல் அதற்கு முற்றிலும் எதிர்மறையானவை என்பதையே நிரூபிக்கின்றன. இதை தி.மு.கவின் கூட்டணியில் உள்ள அச்சமுதாய மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்பவர்களும் கண்டுகொள்வதில்லை.

  • மதிமுகன்