குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான சாகேத் கோகலே, பொய்யான தகவல்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இதனையடுத்து அவர் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலியான செய்தித் துணுக்குகளை மேற்கோள் காட்டி கோகலே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மோர்பிக்கு மோடியின் சில மணிநேர பயணத்திற்கு ரூ. 30 கோடி செலவானது என்பதை தகவல் அறியும் உரிமை சட்டம் விளக்குகிறது. இதில் வரவேற்பு, நிகழ்வு மேலாண்மை மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றுக்கு ஆன செலவு ரூ. 5.5. கோடி. 135 பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட தலா ரூ. 4 லட்சம் கருணைத் தொகை என்பது மொத்தமாக ரூ. 5 கோடி. அதாவது, மோடியின் நிகழ்வு மேலாண்மைக்காக செலவு செய்யப்பட்ட பணம், 135 பேரின் உயிரைக் காட்டிலும் அதிகம்” என கூறியிருந்தார். ஆனால், கோகலே கூறியது போல் அத்தகைய ஆர்.டி.ஐ மற்றும் ஊடக அறிக்கைகள் எதுவுமே இல்லை. இதையடுத்து, பா.ஜ.க மூத்த நிர்வாகி பாலாபாய் கோத்தாரி அளித்த புகாரின் அடிப்படையில் இதனை ஆய்வு செய்த காவல்துறையினர், கோகலேவின் பொய்யை கண்டறிந்தனர். பின்னர், கோகலே மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். வழக்கம்போல, திருணமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன், இதனால் எதிர்க்கட்சியை மிரட்ட முடியாது. இது பா.ஜ.கவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளார்.