திருணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திருணமூல் காங்கிரஸ் ஆட்சியில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு, ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது குறித்து அமலாக்க துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக பார்த்தாவின் வீட்டில் கடந்த ஜூலையில் அமலாக்க துறையினர் சோதனையும் நடத்தினர். பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 49.80 கோடி ரூபாய் பணம், 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் அமலாக்க துறை தொடர் விசாரணையை நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மேற்கு வங்க முதன்மை கல்வி வாரிய முன்னாள் தலைவர் மற்றும் திருணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மாணிக் பட்டாச்சார்யாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த அமலாக்க துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இப்படி தொடரும் ஊழல் புகார்கள், கைதுகள், ஹிந்து விரோத நடவடிக்கைகளால் மமதா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கை கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.