மேற்கு வங்கத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி. அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது நடத்திய ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் பிர்பம் மாவட்டத் தலைவருமான அனுபிரதா மொன்டால் கைது செய்யப்பட்டுள்ளார். கால்நடை கடத்தல்காரர்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை பாதுகாத்தது, கைப்பற்றப்பட்ட கால்நடைகள் கணக்கில் மோசடி செய்து பலகோடிகள் சுருட்டியது உள்ளிட்ட குற்றங்களின் கீழ் இவரது உதவியாளர்கள் உட்பட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மொன்டாலின் முக்கிய பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறை சம்மன் அனுப்பியும் மொன்டால் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருடைய வீடு உள்ளிட்ட இடங்களில், சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால், சி.பி.ஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.