நேதாஜிக்கு அஞ்சலி

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்காக நான்கு நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றுள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் டாக்டர் மோகன் பாகவத், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ஹரோரோவில் உள்ள ராஜரிஷி பாக்யசந்தா திறன் மேம்பாட்டு மையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மணிப்பூர் ஆர்.எஸ்.எஸ் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய மோகன் பாகவத், ‘தேசம் முழுவதும், ஆர்.எஸ்.எஸ் நேதாஜியின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது. பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டுடன் நேதாஜியின் 125வது பிறந்தநாளும் வருவதால் இந்த ஆண்டு கொண்டாட்டம் மிக முக்கியமானது. இந்த சுதந்திரத்திற்காக, நேதாஜி ஒரு ராணுவத்தை கட்டியெழுப்பி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். நேதாஜி இறந்துவிட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காக தியாகம் செய்தவர் அவர்.

நேதாஜி தைரியம், தேசியவாதம், அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகத்தின் அடையாளம். அவரது வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம். அவர் தனக்காக வாழவில்லை, பிறருக்காகவும் தேசத்திற்காகவும் வாழ்ந்தார். பாரதம் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டதை அவமானமாகக் கருதினார். முழுமையான சுதந்திரத்திற்காக போராடினார். நாம் நேதாஜியாக இருக்க முடியாது. ஆனால், அவரைப் போல் ஆக முயற்சிக்கலாம். அது தனிமனிதனுக்கும், தேசத்துக்கும், அனைவருக்கும் நன்மை பயக்கும். தேசத்தின் வளர்ச்சிக்கு அவரைப் போன்ற ஒரு நபர் எப்போதும் தேவை. அவரது தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, தேசிய உணர்வு, ஒற்றுமை மற்றும் தியாகத்தின் உணர்வைத் தூண்டுவது நேதாஜிக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கும்’ என தெரிவித்தார்.

இந்த நேதாஜி பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது இந்திய தேசிய ராணுவத்தின் போர் வீரர்களான மொய்ராங் கொய்ரெங்ம் ஹேமன் நீலமணி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு நேதாஜியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய தேசிய ராணுவம் மற்றும் நேதாஜியின் வாழ்க்கை புகைப்படத் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது.