தியாகிகளுக்கு அஞ்சலி பேரணி

ஜம்மு காஷ்மீர் மக்கள் மன்றம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜம்முவில் ஒரு பேரணியை நடத்தினர்.  ஜம்முவில் காந்தி நகரில் அமைந்துள்ள பெண்களுக்கான பத்மா சச்தேவ் அரசு முதுகலை கல்லூரியில் இருந்து துவங்கிய இந்த பேரணியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் இருந்து பாரதத்தில் தஞ்சம் புகுந்த அகதிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு ‘புண்யபூமி ஸ்மரண் சபை’ என்று பெயரிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 1947 போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீரமரணம் அடைந்த தியாகிகள் மற்றும் அதிகாரிகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.