மத்தியப் பிரதேசத்தின் போபாலில் பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகம் தொடர்பான ஒரு தேசிய கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசின் பழங்குடியின விவகார அமைச்சகம், குஜராத் பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை இணைந்து ஏப்ரல் 7, 8 தேதிகளில் இந்த கருத்தரங்கை நடத்தியது. பழங்குடியினர் வரலாறு, விடுதலைப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியகம் அமைப்பதில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கைவினைக் கலைஞர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். 2016ல் தனது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி, பழங்குடியினத்தைச் சேர்ந்த வெளியில் தெரியாத விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, குஜராத், ஜார்க்கண்ட், ஆந்திரா, சத்தீஷ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மணிப்பூர், மிசோரம், கோவா ஆகிய மாநிலங்களில் இந்த அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2021 நவம்பர் 15ல் பழங்குடியினர் கௌரவ தினத்தன்று ஜார்க்கண்டில் பகவான் பிர்சா முண்டா பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.