ஒரு பெண் முதலமைச்சரின் ஆட்சியின் கீழ் உள்ள ஒரு மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற நிலைதான் மேற்கு வங்கத்தில் நிலவுகிறது. அதற்கு சமீபத்திய உதாரணமாக, அங்குள்ள மேற்கு மிட்னாபூர் என்ற இடத்தில் பா.ஜ.கவின் மகிளா மோர்ச்சா பிரிவை சேர்ந்த சேர்ந்த பழங்குடியின பெண் உறுப்பினரான அருணா சிங் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பிங்லா பகுதியின் உஜான் கிராமத்தில் ஏப்ரல் 20ம் தேதி அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் இவ்வழக்கில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரஞ்சன் சிங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பா.ஜ.கவை சேர்ந்த மேற்குவங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, எம்.எல்.ஏக்கள், தொண்டர்களுடன் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், ‘எங்களது பழங்குடியின மகிளா மோர்ச்சா தொண்டர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் 100 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை, பலாத்காரக் கொலைகள் மேற்கு வங்கத்தில் பதிவாகியுள்ளன . இக்கிராமவாசிகள், மதுப்பழக்கம் இங்கு பெரிய பிரச்சனையாக இருப்பதால் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என குற்றம் சாட்டுகின்றனர்’ என தெரிவித்தார். ஹன்ஸ்காலி பகுதியில், ஒரு மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விவரங்களை அறிய, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா அமைத்த ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு, மேற்கு வங்கத்தில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் காரணம் காட்டி, மாநிலத்தில் 355 மற்றும் 356 விதிகளை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.