தமிழகம் முழுவதும் மணல் திருட்டு, கனிமவளக் கொள்ளை உள்ளிட்டவை தி.மு.க ஆட்சியாளர்களின் ஆசியோடு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் கொதுகை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அப்புறத்தப்படுத்தி தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். நீர்வள ஆதாரத் துறையும் இதற்கான நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. அதன்படி கொதுகை ஏரியில் 250 மீட்டர் நீளத்துக்கும் 126 மீட்டர் அகலத்துக்கும், 3 அடி ஆழத்துக்கும் சுமார் 5,000 லோடு மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஏரியில் பல பொக்லைன் இயந்திரங்களை கொண்டு விதிகளை மீறி பல அடி ஆழத்துக்கு மண் திருடப்பட்டு வருகிறது. ஏரியில் அதிக அளவு ஆழத்துக்கு மண் எடுப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். மேலும் நூற்றுக்கணக்கான லாரிகள் ஏரியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு தினமும் அந்த கிராமத்தின் வழியாக அதிக வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனினும் தி.மு.க அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, மக்களே களமிறங்கி தங்கள் பகுதி வழியாக செல்லும் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மண் எடுப்பதை கண்காணிக்க வேண்டும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் லாரிகளை முறைப்படுத்த கிராமத்தினரை பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் பேசி முடிவு செய்தவதாகவும் லாரியை விட வேண்டும் என்றும் லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்தினர். பின்னர் பேச்சு வார்த்தைக்கு பிறகு லாரிகள் விடுவிக்கப்பட்டன. கரூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.கவின் செந்தில்பாலாஜி, “தேர்தல் வாக்குறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன். அடுத்து தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டால், 11.05 மணிக்கு மாட்டு வண்டியை நீங்களாகவே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். அப்படி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள். அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.