கேரளாவை சேர்ந்த பீட்டர் மையா லிபரம்பில் என்பவர், ‘கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்; அதை அகற்ற வேண்டும்’ என கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது, அற்பமானது, விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்ததுடன் மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் உடைய அமர்வில், பீட்டர் மையாலிபரம்பில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ‘கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது வாக்காளர்களை கவரும் நோக்கத்திற்காகவே என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. தடுப்பூசி சான்றிதழ் பல்வேறு தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெரிய விளம்பரம் கிடைத்து விடாது. பிரதமரின் புகைப்படமும், அதில் உள்ள வாசகங்களும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்தவே இடம்பெற்றுள்ளது. இதில் அடிப்படை உரிமை மீறல் இல்லை. ஒரு சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம் பெறுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சகிப்புத்தன்மை அற்றவர்களாக குடிமக்கள் இருக்க கூடாது’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். கருணை அடிப்படையில் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் அபராதத்தை 25 ஆயிரமாக குறைத்து உத்தரவிட்டனர்.