தமிழகத்தில் பால் விலை உயர்வைக் கண்டித்து கடந்த நவம்பர் 15ல் பா.ஜ.க சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவில் ஆட்களை திரட்டி போராட்டம் நடத்திய தலைவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாராட்டுத் தெரிவித்தார். இது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகளுடன் கான்பரன்ஸ் கால் செய்து பேசிய அண்ணாமலை, “பால் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் பேசப்படும் போராட்டமாக மாறியுள்ளது. இதில் அதிகளவில் கோவை மதுக்கரை ஒன்றியத்தில் 700 பேர், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை கிழக்கு ஒன்றியத் தில் 640 பேர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் 500க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்பாட்டம் தொடர்பாக மாவட்டத் தலைவர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர். திண்டுக்கல்லில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வும் சிறப்பாக அமைந்தது. அதேசமயம், சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையும் சிறப்பாக இருந்தது. பிரதமரும், அமித்ஷாவும் கட்சி வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். தமிழகத்தில் பாஜ.கவுக்கான சூழல் சாதகமாக உள்ளது. அமைப்பு ரீதியாக கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டும் என இருவரும் அறிவுறுத்தினர். இதனால் அடுத்த ஓராண்டுக்கு கட்சியை ஒன்றிய அளவில் பலப்படுத்தும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். இதை செய்தால் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். இதை ஒரு சபதமாக எடுத்து நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.