1:30 மணி நேரத்தில் திருப்பதி அசத்தும் வந்தே பாரத் ரயில்

 

சென்னை சென்ட்ரல் – விஜயவாடா வந்தே பாரத் ரயில், திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்வதால், பயணியர் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர். திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையம், முக்கிய சந்திப்பாக உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்கள், ரேணிகுண்டாவில் நின்று செல்கின்றன. சென்னை சென்ட்ரல் – ஆந்திர மாநிலம், விஜயவாடா வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி கடந்த, 24ம் தேதி துவக்கி வைத்தார். இந்த ரயில் செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து அதிகாலை, 5:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை, 7:05 மணிக்கு ரேணிகுண்டா, 8:39 மணிக்கு நெல்லுார், 10:09 மணிக்கு ஓங்கோல், 11:21 மணிக்கு தெனாலி நகரங்களில் நின்று செல்கிறது.

சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு, 6:40 மணி நேரத்தில் செல்கிறது. திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்வது, திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இதுகுறித்து, பயணி யர் சிலர் கூறுகையில், ‘வந்தே பாரத் ரயிலில் ரேணிகுண்டா வரை பயணம் செய்தது நல்ல அனுபவமாக உள்ளது. அதிர்வு இல்லாமல், சொகுசாகவும் விரைவாகவும் பயணம் செய்ய முடிகிறது. ஒன்றரை மணி நேரத்தில் ரேணிகுண்டா சென்று, அடுத்த, 30 நிமிடங்களில் திருப்பதி செல்ல முடிகிறது’ என்றனர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ரேணிகுண்டா செல்ல மற்ற விரைவு ரயில்கள் இரண்டரை மணி முதல் மூன்று மணி நேரம் எடுத்து கொள்கின்றன. ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக திருப்பதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வந்தே பாரத் ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்