இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், “கேரளாவில் ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது. அங்கு அலைபேசிகூட வேலை செய்யாது; அங்கே போய்விட்டால் வெளி உலகு முற்றிலும் துண்டிக்கப்பட்டு டென்ஷன் போய்விடும். அங்கே போய் ஒருவாரம் இருக்கலாம்’ என்றார். அடுத்தவர், “எனக்கு இது சரிப்பட்டு வராது; இதை நான் விரும்பவில்லை” என்றார்.
ஏன் என்று கேட்ட நண்பருக்கு இவர், ‘நம்மைச் சுற்றி இருப்பவர்கள் யார்? மனைவி, பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள், வேலையில் தொடர்பில் உள்ளவர்கள், முற்றிலும் தெரியாதவர்கள்.
மனைவியோடு பேசிக் கொண்டே இருங்கள், சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள். எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தால்? அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று. ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.
அடுத்து, பிள்ளைகள். பள்ளி படிப்பு முடியும்வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள். அதன் பின் அவர்கள் உலகம் வேறு. அதில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். நீங்கள் அவர்களோடு தொலைபேசியில் பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும். இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள். தனது குழந்தைகளை பிரிந்து வெளிநாட்டில் பணி செய்யும் தந்தைகளுக்கு இந்த வேதனை புரியும். அப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மாவாவது அவர்களை பார்த்துக் கொண்டிருங்கள்.
அடுத்து உறவுகளும், உடன் பணிபுரியும் நண்பர்களும். இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் வேறு மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ இருந்தால்தான் புரியும். அங்கு உள்ளவர்கள் நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு “வாடா மாப்ள” என்று பேச முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்தால் வாழ்கையை ருசியுங்கள்; அனுபவியுங்கள்.
காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்தும். அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை. நாம் நினைத்தாலும் வெளியே போக முடியாது. தனிமையே நம்மை கொல்லலாம். அதுவரை, கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞ்சி குலாவுவோம். ஆனால் தனிமை வேண்டாம்’ என்றார்.
சமூக ஊடகத்தில் இருந்து