மூன்று மத அடிப்படைவாதிகள் கைது

கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி பிரவீன் நெட்டாரு க‌டந்த 26ம் தேதி முஸ்லிம் பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் ஹாவேரியை சேர்ந்த ஜாகீர், பெல்லாரேவை சேர்ந்த முகமது ஷபீக் உட்பட 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் மூன்று முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக காவல்துறை ஏ.டி.ஜி.பி அலோக் குமார் கூறுகையில், ”பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் மங்களூருவைச் சேர்ந்த ஷியாபுதீன் அலி, ரியாஸ் ஆனந்தட்கா, பஷீர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொலையில் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மங்களூருவில் இருந்து கடந்த ஜூலை 26ம் தேதி வெளியேறிய இவர்கள், கேரள மாநிலம் காசர்கோட்டில் தங்கியிருந்தனர். கைதானவர்களிடம் இருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட 7 கார்கள், 5 இரு சக்கர வாகனங்கள், 1 ஆட்டோ, 12 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 3 பேருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியுடனும் அதன் தாய் அமைப்பான பி.எப்.ஐயுடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.