கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, ஊழியர்கள், தங்கள் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப் கணக்கில் இருந்து இரண்டாவது முறையாக 3 மாத முன்பணம் எடுத்துக் கொள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகம் (இ.பி.எப்.ஓ) அனுமதித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது முழு ஊரடங்கு விதிக்கப்பட்டபோது எழுந்த நிதி சிக்கலை சமாளிக்க பி.எப் கணக்கிலிருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல, தற்போதும் 2வது முறையாக பி.எப் கணக்கில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.3 மாத அடிப்படை சம்பளம் அல்லது பி.எப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ அதை முன்பணமாக ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம்.குறைவான தொகைக்கும் விண்ணப்பிக்க முடியும்.கடந்த ஆண்டு, 76.31 லட்சம் கொரோனா கால முன்பண கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்களுக்கு ரூ.18,698.15 கோடி விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.