அச்சுறுத்தும் ஸ்டெல்த் ஒமிக்ரான்

கரோனா வைரஸ் திரிபுகளிலேயே ஒமிக்ரான் வகைதான் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதில், தற்போது ஏற்பட்டுள்ள உருமாற்றமான ஸ்டெல்த் ஒமிக்ரான் (பி.ஏ 2 திரிபு) அதைவிட இன்னும் வேகமாக பரவக்கூடியது எனத் கூறப்படுகிறது. சீனாவில் தற்போது எளிதில் பரவக் கூடிய ஸ்டெல்த் ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், சீனா முழுவதும் 13 நகரங்களில் முழுமையாகவும், பல நகரங்களில் பகுதி அளவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிலும் இவ்வகை வைரஸ் வேகமாக பரவி வருவதால் அது நான்காவது அலையை ஏற்படுத்துமோ என அமெரிக்க மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 25,359 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2 மாதங்களில் அதிக அளவாகும். இவற்றில் 37 சதவீதம் ஸ்டெல்த் ஒமிக்ரான் வகையை சேர்ந்தது. எனினும், இதுவரை உலக சுகாதார அமைப்பு இதனை ’வேரியன்ட் ஆஃப் கன்சர்ன்’ எனப்படும் கவலை கொள்ளத்தக்க திரிபாக அறிவிக்கவில்லை என்பது ஆறுதல் தருகிறது. முன்னதாக, வரும் ஜூன் மாதம் கொரோனாவின் 4ம் அலை ஏற்படும் என ஐ.ஐ.டி கான்பூர் கணித்துள்ளது என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.