உலகளவில் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறைக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள அதிகப்படியான கடன் மற்றும் வட்டி சுமையால் பல முன்னணி நிறுவனங்களுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மறுபுறம், உக்ரைன் ரஷ்ய போர், கொரோனா, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு உலகப் பொருளாதார காரணிகளால், பெருநிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வருவாய் வேகமாக குறைந்து வருகின்றன. இந்த சூழலில் செலவுகளைக் குறைக்க அவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு முக்கிய பகுதியாக அவை தங்களது நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளன. கடந்த 3 மாதங்களாக இந்த போக்கு அதிகரித்து வருகிறது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுல் ஒன்றான ஆரக்கிள், ஆகஸ்ட் மாதமே அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் பணிநீக்க நடவடிக்கைகளை துவங்கியுள்ளது, இம்முறை வட அமெரிக்கா கிளவுட் இன்பரா மற்றும் டெக் பிரிவில் அதிக அளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. 2023ம் ஆண்டில் 519 மில்லியன் டாலர் அளவிலான செலவுகள் மறுசீரமைப்பு செய்யப்படும் எனப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது இதை உறுதிப்படுத்துகிறது.
முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவர்றின் தாய் நிறுவனமான ‘மெட்டா’ அதன் அனைத்து ஊழியர்களிடமும்; 200 சதவீதம் முழு முயற்சியுடன் பணியாற்றி உங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்டாவெர்ஸ் வர்த்தகத்தின் தோல்வி, மந்தமான காலாண்டு முடிவுகள் ஆகியவற்றின் மூலம் மெட்டா பங்குகள் மோசமான சரிவை சந்தித்துள்ள நிலையில் தற்போது பணிநீக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல பிரபல இன்டெல் நிறுவனமும், அதன் கம்ப்யூட்டர் விற்பனைகள் பெருமளவில் குறைந்துள்ள காரணத்தால் நிதி நிலையைச் சமாளிக்கப் பணிநீக்கம் இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவித்தது. அதன்படி, அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் இதன் மூலம் 2025ம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் பணத்தைச் சேமிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் நாட்டின் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘எலக்ட்ரோலக்ஸ்’, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 3வது காலாண்டில் ஏற்பட்டுள்ள கடுமையான இழப்புகளையடுத்து நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்ததுள்ளது. பிரபல முதலீட்டு நிறுவனமான கிரடிட் சூயிஸ், அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 9,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்ததுள்ளது.
அமெரிக்காவில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது, உணவு விநியோகம் உள்பட பல சேவைகளை செய்துவரும் லிஃப்ட் என்ற நிறுவனம் தனது 13 சதவீத ஊழியர்கள் அல்லது 683 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளாதாக தெரிவித்துள்ளது. டுவிட்டரும் சமீபத்தில் சுமார் 3500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது அதன் மொத்த ஊழியர்களில் 50 சதவீதமாகும்.