ஏப்ரல் 2 அன்று, சீக் பார் ஜஸ்டிஸ் என்ற காலிஸ்தானி பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த “குர்பத்வந்த் சிங் பன்னு” என்று கூறிக்கொண்ட ஒரு நபர், அசாமில் உள்ள சில பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, அதன் மூலம் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அதில் அந்த நபர், “அசாமில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மிகவும் கவனமாகக் கேளுங்கள், காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களுக்கும் பாரத ஆட்சியாளர்களுக்கும் இடையேதான் சண்டை. எனவே, இந்த மோதலுக்கு நீங்கள் இரையாகிவிடாதீர்கள்” என்று மிரட்டினார். மேலும், “காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு என்ற அமைதியான ஜனநாயக செயல்முறை மூலம் பாரத ஆக்கிரமிப்பிலிருந்து பஞ்சாபை விடுவிக்க நாங்கள் முயன்று வருகிறோம். உங்கள் அரசாங்கம் தொடர்ந்து சித்திரவதை செய்து ஆறு பேரையும் துன்புறுத்தினால் அதற்கு நீங்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும்” என்று பேசியுள்ளார். தப்பியோடி தலைமறைவாக உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதியும் வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்கள் சிலர், கிழக்கு அசாமின் திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த அச்சுறுத்தல் அழைப்பு, அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க அவற்றின் பதிவுகள், மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் பகிரப்பட்டது, மேலும் அனைத்து காவல்துறை கண்காணிப்பு அமைப்புகளும் இதுகுறித்து எச்சரிக்கப்பட்டன.
அசாமின் காவல்துறை இயக்குநர் ஜெனரல், ஜி பி சிங், தனது டுவிட்டர் பதிவில், “காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னு, இந்திய சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு பயங்கரவாதி. அவர், சீக் பார் ஜஸ்டிஸ் என்ற சட்டவிரோத பயங்கரவாத அமைப்புக்கு தலைமை தாங்குகிறார். இந்த மிரட்டல் குறித்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அசாமின் சிறப்பு அதிரடிப்படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இசட்+ வகை பாதுகாப்பில் உள்ள முதல்வருக்கு அசாம் காவல்துறை பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. உலகளாவிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்த அச்சுறுத்தல், அசாம் காவல்துறையால் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.