உத்தரப் பிரதேசத்தில் கேரளாவை சேர்ந்த இப்ராகிம் தாமஸ் உள்ளிட்ட மூவர் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக காஜியாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இப்ராகிம் தாமஸ், அவரது மனைவி ரீனா மற்றும் பபிதா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் உள்ளூர் பா.ஜ.க தலைவர் சுனிதா அரோராவை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றனர். மூவருக்கும் எதிராக அரோரா புகார் அளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்தப் புகாரில், அரோரா தனது பக்கத்து வீட்டுப் பெண்ணான பபிதா மூலம் தாமஸுக்கு அறிமுகமானதாகக் கூறியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த தாமஸ் கல்வாரி சர்ச்சில் பணிபுரிந்து வருகிறார். அவர், பபிதா மூலம், அரோராவை ஒரு பார்லருக்கு வரவழைத்து, அவரது மதத்தை கிறிஸ்துவ மதத்திற்கு மாறும்படி அவரை கட்டாயப்படுத்தினார். தாமஸ் தனது மனைவியின் உதவியுடன் மத விழாக்களை ஏற்பாடு செய்து மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் உத்தரப் பிரதேச சட்ட விரோத மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக காவல்துறை துணை ஆணையர் விவேக் சந்திர யாதவ் தெரிவித்தார்.