தேச விரோத கோஷம் எழுப்பியவர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜாமியா மசூதிக்குள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தேச விரோதமாகவும் பிரிவினையை தூண்டும் விதத்திலும் சிலர் கோஷங்களை எழுப்பினர். ஆனால், அந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் அதனை ரசிக்கவில்லை, ஒதுங்கியே இருந்தனர்.  இதனால், கோஷம் எழுப்பிவர்களுக்கும் ஜாமியா மசூதியின் இன்டெஜாமியா கமிட்டியின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோஷம் எழுப்பியவர்களை மசூதிக்குள் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்தவர்கள் அங்கும் கோஷம் எழுப்பி மற்றவர்களைத் தூண்டிவிட முயன்றனர். பின்னர் சுற்றிலும் காவலர்கள் இருப்பதைக் கண்டு ஓடிவிட்டனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓடி ஒளிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். விசாரணையில், வெள்ளிக்கிழமை தொழுகையை சீர்குலைக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் இவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து கட்டளை வந்தது தெரியவந்துள்ளது. அமைதியை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் மிகவும் தீவிரமாகப் பார்க்கப்படும். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்கு மத வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்றும் ஸ்ரீநகர் காவல்துறை எச்சரித்துள்ளது.