ஈரோடு இடைத்தேர்தலையொட்டி வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் மொடக்குறிச்சி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான சி.கே சரஸ்வதி, பின்னர் செய்தியாளிர்களிடம் பேசிய அவர், “தேர்தல் ஆணையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தத் தேர்தலில் ஏராளமான பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும். பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவரும் நிலை மாற வேண்டும். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திருமங்கலம் பார்முலா போல ஈரோடு கிழக்கு பார்முலா ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து, பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர். வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பெருமை அடையும். வாக்களிக்கும் போது வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை அழிக்க ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்” என கூறினார்.