இதுதான் சீனாவின் குணம்

வரும் 2049க்குள் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக மாறுவதை சீனா நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்காக சீனாவை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (சி.சி.பி) எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் முக்கியமான ஒன்று திருட்டு. ஒவ்வொரு 10 மணி நேரத்திற்கும் சீனாவின் ஒரு தகவல் திருட்டு முயற்சியை அமெரிக்கா எதிர்கொள்கிறது என அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ தெரிவிக்கிறது. அமெரிக்க தொழில் நுட்பங்கள் பலவற்றை ஏற்கனவே திருடியுள்ள சீனா, தற்போது புதியதாக அமெரிக்காவில் திருட முயற்சிப்பது அதன் வேளாண்மை தொடர்பான அறிவுசார் சொத்துக்களைதான். சீனா இப்படி திருடுவது அமெரிக்காவில் மட்டுமல்ல பாரதம், இங்கிலாந்து என அனைத்து நாடுகளிடமும் அது தன் திருட்டு புத்தியை காட்டிக்கொண்டுதான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அதன் நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானையும் அது விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘சீன கம்யூனிச அரசாங்கம் தனது இலக்குகளை அடைவதற்காக எதற்கும் துணியும், அதற்காக அது வெட்கப்படாது’ என்கிற உண்மையை சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் முந்தைய பேச்சுகள் சுட்டிக்காட்டுகிறது. சமீப காலமாக, அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட மோ ஹைலோங், வெய்கியாங் ஜாங், ஹைட்டாவோ சியாங் உள்ளிட்ட சீன விஞ்ஞானிகளே இதற்கு சாட்சி. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிபுணரும், பாதுகாப்புத் துறையின் சைபர் பாதுகாப்பு கொள்கை, வியூகம் மற்றும் சர்வதேச விவகாரங்களின் முன்னாள் இயக்குநருமான ஓய்வு பெற்ற கர்னல் ஜான் மில்ஸ், ‘சீனாவின் திருட்டுகளில் இவை பனிப்பாறையின் முனை மட்டுமே. இவ்வளவு காலமாக, அமெரிக்கா, ரஷ்யா மீது கவனம் செலுத்தி வந்தது. ஆனால், சீனாதான் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல், கடந்த 10 வருடங்களுக்கு மேல் சீனா இப்படி திருடி வருகிறது’ என கூறியுள்ளார்.