இது ஆரம்பம்தான்

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசினார். பா.ஜ.க நிர்வாகி சூர்யா சிவாவின் ஆடியோ விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தி.மு.கவினரைப் போல பெண்கள் குறித்து பொதுவெளியில் ஆபாசமாக பேசவில்லை. இது தனிப்பட்ட உரையாடல்தான். என்றாலும் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை சூர்யா சிவா, டெய்சி சரண் உள்பட யார் மீறி இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பேராசிரியர் கனகசபாபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். யார் தவறு செய்திருந்தாலும், நான் விடப்போவதில்லை. காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பான கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடரும். இன்னும் ஒரு பத்து நாட்கள் பொறுத்திருங்கள். ஒழுக்கம் சார்ந்த விவகாரத்தில் கட்சியின் லட்சுமண ரேகையை யார் தாண்டுகிறார்களோ அவர்கள் யாராக இருந்தாலும் நான் விடப்போவதில்லை. இது ஆரம்பம்தான்” என்று கூறியுள்ளார்.

சென்னையில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து எனக்கு தெரியாது. ஆளுநர் சார்பில் நான் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை, இந்த ஆன்லைன் ரம்மிக்கு தடை என்பது காலத்தின் கட்டாயம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த ஆன்லைன் ரம்மிக்கு தமிழ்நாடு அரசு தடையைக் கொண்டு வந்துபோதே பா.ஜ.க அதனை வரவேற்றது. அ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது. தே.ஜ.க கூட்டணியில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருக்கிறோம். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது. அதேநேரத்தில் 2024 எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. பா.ஜ.க எவ்வளவு இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்புவது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. கூட்டணி ஆரோக்கியமான முறையில் சென்று கொண்டுள்ளது. பா.ஜ.கவின் வளர்ச்சி அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ளன. எத்தனை இடங்களில் போட்டி என்பதை முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது” என தெரிவித்தார்.