திருவட்டாறு கோயில் வழக்கு

‘திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கோபுரம், சுவர்கள் மற்றும் தூண்களில் தற்போது வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த வர்ணங்கள் தரமற்று இருப்பதாக பல பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். பொதுவாக பழமையான கோயில்களில் பச்சிலைகள் கலந்த வர்ணத்தை பூசுவதுதான் வழக்கம். அதற்கு மாறாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெறும் இந்த செயல், கோயிலின் கோபுரம், தூண்கள், சுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிட்டது. கோயில் கருவறை தரையில் கிரானைட் கல் பதிக்கப்படுகிறது. ஐந்து கால எண்ணெய் பூஜை நடைபெறும் நிலையில் கிரானைட் கற்கள் பதிப்பது பக்தர்கள் நடந்து செல்ல இடையூறாக அமைந்துவிடும். எனவே, திருவட்டாறு ஆதிகேசவன் கோயிலில் பழமையான முறையில் வர்ணம் பூசவும், கருவறையில் பழமை மாறாமல் தரை கற்கள் பதிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு, மனுதாரர் புகார் தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தது.