கொரோனா மருந்தை தயாரிக்கும் திருமலை தேவஸ்தானம்

ஆந்திராவின் நெல்லுார் மாவட்டம், கிருஷ்ணபட்டணத்தைச் சேர்ந்த ஆனந்தய்யா என்ற ஆயுர்வேத மருத்துவர், கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கி வந்தார். இந்த மருந்தின் மேல் மக்களுக்கு அதீதமான நம்பிக்கை வந்ததால் கூட்டம் கூட்டமாக நெல்லூருக்கு படையெடுக்கத் தொடங்கினர். காவலர்கள் பாதுகாப்புத் தர முடியாத அளவிற்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. அவரின் மருந்தின் நம்பகத்தன்மை குறித்து ஆராய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மருந்தை குறித்து மேலும் அறிய திருப்பதி திருமலை தேவஸ்தானம், தாங்கள் நடத்தும் ஆயுர்வேத பல்கலைகழக அதிகாரிகள், அறங்காவலர் குழுவினரை கிருஷ்ணபட்டணம் அனுப்பியது. அவர்கள், ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யாவை சந்தித்து உரையாடி, மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள், தயாரிப்பு முறை உள்ளிட்டவற்றை நேரடியாக பார்வையிட்டு அறிந்தனர். ஆயுஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும் இந்த ஆயுர்வேத மருந்தை அதிக அளவில் தயாரித்து மக்களுக்கு வினியோகிக்க தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.