திரித்துக் கூறும் தியாகராஜன்

சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ. 5, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறைக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டது. தற்போது, பெட்ரோல் விலை லிட்டர், 100 ரூபாயை நெருங்கும் நிலையில், ஏன் விலையை குறைக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த சூழலில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், ‘தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும், மதிப்பு கூட்டு வரியான, ‘வாட்’ வரியை குறைக்க முடியாது’ என முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். மேலும், அதற்கான எந்த நியாயமான காரணத்தையும் அவர் விளக்கவில்லை. தன் கட்சியின் தவறை மறைக்க மத்திய அரசை குறைகூறியுள்ளார். அவரது பேச்சு, தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம், தான் தான் இம்மாநில நிதியமைச்சர் என்று அறியாமல் இன்னமும் எதிர்கட்சி மனோபாவத்தில் பேசுகிறாரா அல்லது அந்த ஆணவத்தில் பேசுகிறாரா என புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு குழப்பமாக உள்ளது.

அவரது வாதப்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 10 ரூபாயாக இருந்த கலால் வரியை, 32.90 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது உண்மைதான். ஆனால், அதனால்தானே இன்றைய சூழலில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை, இலவச தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள், சாலைகள் எல்லாம் சாத்தியமாகிறது. மேலும் கலால் வரியைக் குறைத்தால் அதன் பலன் வியாபாரிகள் கூடுதல் லாபம் பெற வழி வகுக்குமேயன்றி மக்களுக்கு போய் சேராது. இந்த சிறிய உண்மை பாமரனுக்கே தெரியும்போது அது அமைச்சருக்குத் தெரியாதது ஏனோ?

மத்திய அரசு வசூலிக்கும் 32.90 ரூபாய் கலால் வரியில், 31.50 ரூபாயை மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. 1.40 ரூபாயை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்குகிறத’ என அப்பட்டமாக பொய் கூறியுள்ளார் அமைச்சர் தியாகராஜன். அடிப்படை கலால் வரி ரூ. 1.40, சிறப்பு கூடுதல் கலால் வரி ரூ. 11, வேளாண் தீர்வை ரூ. 2.50, சாலை மற்றும் உட்கட்டுமானத் தீர்வை ரூ. 18 என இந்த கலால் வரி பிரிக்கப்படுகிரது. அதில், சாலை மற்றும் உட்கட்டுமானத் தீர்வையும், வேளாண் தீர்வையும் (18 + 2.50) இணைந்து ரூ. 20.50 மத்திய அரசுக்கு செல்கிறது. மீதமுள்ள ரூ.12.50 மா நில அரசுகளுக்குத்தானே பிரித்துக் கொடுக்கப்படுகிறது? மத்திய அரசின் வேளாண் தீர்வையும் விவசாயிகளுக்கு தரப்படும் ரூ. 6,000 என மறைமுகமாக மாநிலங்களுக்குத்தானே வருகிறது?

அடுத்ததாக, ‘பெட்ரோல் விலை 98 ரூபாய் என்றால், அதில் 70 ரூபாய் மத்திய அரசுக்கே செல்கிறது’ என ஏதோ மத்திய அரசே அனைத்தையும் எடுத்துக்கொள்வதுபோல குறைகூறும் அமைச்சர், அதனை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி செலவு, கப்பல், லாரி போக்குவரத்து செலவு, டீலர் கமிஷன், பராமரிப்பு, சம்பளம் என பல்வேறு செலவுகளுக்குத்தானே அந்த பணம் செலவாகிறது. இதில் ஒரு செலவும் செய்யாத மாநிலத்துக்குத்தானே மீதமுள்ள 28 ரூபாயும் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட வரிகள் வாயிலாக வந்து சேர்கிறது? என்பதை திட்டமிட்டே மறைத்துவிட்டார்.

நியாயமாகப் பார்த்தால் வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றத் தவறுவது, பொய்யாக குற்றச்சாட்டு வைப்பது, திசைத் திருப்புவது, திரித்துக் கூறுவது, உண்மையை மறைப்பது போன்றவை இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம். இதற்காக ஒரு குடிமகன் அமைச்சர் மீது வழக்குத் தொடுக்க முடியும். தண்டனையும் வாங்கித்தர முடியும்.

தற்போதைய கொரோனா சூழலில் தமிழக அரசின் செலவினங்களுக்கு அதிகப் பணம் தேவை உள்ளதால் இப்போதைக்கு நடைமுறைப்படுத்த இயலாது. சூழல் சரியான பிறகு செய்கிறோம் என கௌரவமாக கூறியிருக்கலாம். ஆனால், அதைவிடுத்து வழக்கம்போலவே மத்திய அரசை குறை கூறி தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்து தன் அறியாமையையும் இயலாமையையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் அமைச்சர் தியாகராஜன்.

மதிமுகன்